பாதாள உலகத் தலைவன் என பரவலாக அறியப்படும் கஞ்சிபானை இம்ரான் என்ற மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான், சுகயீனம் காரணமாக பூசா கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் நிலையில், நேற்று அவருக்கு நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பூசா சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைத்துள்ள பூசா சிறைச்சாலையில் கைதிகள் பலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் அதிகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 கைதிகளில் 39 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் 39 கைதிகளில், கொஸ்கொட தாரக, பொடி லெசி, கஞ்சிபானை இம்ரான் மற்றும் வெலே சுதா போன்ற திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடங்குவதாகவும், உண்ணாவிரத்தப் போராட்டத்தை பகிஷ்கரித்துள்ள 6 கைதிகளில் பொட்ட நெளபர், கெவ்மா, ஆமி சம்பத் உள்ளிட்டோர் உள்ளடங்குவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன. கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.