இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

குறித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே குறித்த தேர்தல் நடைபெறுவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய விதம் தொடர்பில் வாக்காளர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பின்னர் சமூக இடைவெளியை பேணி தமக்கான வாக்களிப்பு நேரம் வரை காத்திருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான ரட்ணஜீவன் ஹ_ல் தெரிவித்துள்ளார்.

இதற்காக வாக்காளரை வழிநடத்தும் அரசாங்க அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதோடு வாக்களிப்பு நிலையத்தில் முதலாவது அதிகாரிக்கு அருகில் செல்வதற்கு முன்னர் தொற்று நீக்கல் திரவத்தால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

பின்னர் தாம் அணிந்துள்ள முகக்கவசத்தை கீழ் இறக்கி ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.

வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் உள்ளதாக உரிய அதிகாரி கூறிய பின்னர் வாக்காளர் அடையாள அட்டை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் இட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான ரட்ணஜீவன் ஹ_ல் தெரிவித்தார்.

இதேவேளை, சட்ட ஒழுங்குகளை பின்பற்றி காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை அளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரியுள்ளது.

அத்துடன் இதன்போது வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் முகக்கவசம் அணிந்து வாக்குச்சாவடிகளுக்கு செல்லுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய வாக்காளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் வாக்குகளை அளித்த பின்னர் இடைநடுவே காத்திருக்காமல் உடனடியாக வீடுகளுக்கு அல்லது பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் வாக்காளர்களிடம் கோரியுள்ளார்.