ஓய்வு பெற்ற காவல்துறை பரிசோதகர் ஒருவரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாக கூறி நடத்தப்பட்ட இந்த விடுதியில் நான்கு பேருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தினை, குருநாகல் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் - கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் எனும் பெயரில் குறித்த விபச்சார விடுதி நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த அறையை சுற்றிவளைக்கப்பட்டபோது, சிறிய அளவிலான ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கண்டெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறித்த விடுதியானது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியினால் நடத்தப்படுவதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை, இருப்பினும் குருநாகல் தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதிகள் மொனராகலை, அனுராதபுரம், கொழும்பு மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது.
இவர்களின் பராமரிப்புக்காக ஆறாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.