கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தெரிவிக்கும் நேரத்தில் பதவி ஏற்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு பதவி ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கான விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடக்கிறது. அங்கு பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எளிமையாக நடக்கும் விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

அதைத்தொடர்ந்து சட்ட சபைக்கு வரும் ரங்கசாமி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொள்கிறார். ரங்கசாமியுடன் பிற அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

அதன்பின்னரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதுதவிர என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த மேலும் ஒருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
 

ரங்கசாமியின் பதவி ஏற்பு விழா முதலில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்பின் கடற்கரை காந்தி சிலை முன்பு பதவி ஏற்க திட்டமிடப்பட்டு பந்தல்போடும் பணி நடந்தது.

 

அணிவகுப்பு மரியாதை செய்வதற்காக சட்டசபை வளாகத்தில் போலீசார் ஒத்திகை நடத்தினர்


ஆனால் கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.