அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். 

இதையடுத்து மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார்.

ரஜினிகாந்த்

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஐதராபாத் சென்றுள்ளார். 

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.