உயிர்த்தஞாயிறு தாக்கதலின் சூத்திரதாரி சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் தற்கொலைக் தாக்குதலுக்கு முன்னதாக கொழும்பில் ஐ எஸ் ஐ எஸ் சீருடை அணிந்து எடுத்துக் கொண்ட உறுதி ஏற்பு வீடியோவை இணையத்தளத்தில் பதிவேற்றிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட இரகசிய விசாரணையின்போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞனும் திஹாரியை சேர்ந்த 32 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டவர்களாவர்.
நேற்று 31ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்த நிலையில் அதில் ஒருவரே இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து கட்டார் நாட்டுக்கு சென்ற இவர்கள் அங்கு வேலை செய்து வந்த நிலையில் அங்கிருந்து 'வன் உம்மா' என்ற பெயரில் வட்ஸ்அப் குழுவொன்றை உருவாக்கி மத அடிப்படைவாத கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார்.
இலங்கை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நவம்பர் 21ம் திகதி கட்டாரில் இருந்து இவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.