கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.


கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் மகன் சிவக்குமார்(வயது 35), ஆறுமுகம் மகன் மணிகண்டன் (30). இவர்கள் இருவரும் ஏரியை ஏலம் எடுத்து மீன் வளர்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று மாலை இவர்கள் இருவரும் நைனார்பாளையம் அருகே எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள ஏரியை பார்ப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது எதிரே ஆத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.