டாம் வீதியில் பயணப்பொதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த  பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனையினை மேற்கொள்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பெண்ணின் தாயிடம் இருந்தும் மரபணு மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விரு மாதிரிகளும்  பொருந்திப்போனால் சடலம் குறித்த பிரேத பரிசோதனை இடம்பெறும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குறித்த பெண்ணின் தலைப்பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.