திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் ராம்கி(வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். மூத்த மகன் சாய்சரண்(4). சம்பவத்தன்று நடந்த குடும்ப தகராறில் ராம்கி தனது மகன் சாய் சரண் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

 


இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த சாய்சரணை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குடும்ப தகராறில் மகனை தந்தையே தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காயத்ரி நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சாய்சரண் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.