முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தநிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் 19ஆம் திகதிக்கு விசாரணை நீதிபதிகள் குழாமினால் ஒத்திவைக்கப்பட்டது.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி 2 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், குறித்த மனுக்கள் மீது இன்று விஜித் மலல்கொட, முர்த்து பெர்னாண்டோ மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் குழாம் விசாரணை நடத்தியது.

இதன்போது, ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினராக நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன செயற்பட்ட காரணத்தால் குறித்த மனுக்களை வேறு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.