இறுதிக் கட்ட யுத்தத்தை வெற்றிகொள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆதரவு வழங்கினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆணையிரவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம் என அண்மையில் கருணா அம்மான் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்து இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக அப்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை மறுத்த கருணா, இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, இலங்கைக்கு ஆதரவாக சாட்சியளிக்க முன்வந்ததாகவும் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருணா அம்மான் தெரிவித்த விடயங்களில் சிக்கல் இருப்பதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.