திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியில் உச்சுவாடி, சோலாட்சி, கிளியனூர் கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வழக்கம் போல் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன.
இதில் கிளியனூர், உச்சுவாடி, சோலாட்சி பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று மாலை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது இதை பார்த்த 3 நாய்கள் முதலில் சோலாட்சி பகுதியில் மேய்ந்த ஆடுகளை கடித்து குதறியது. அதன்பிறகு உச்சுவாடி மற்றும் கிளியனூர் பகுதிகளுக்கு சென்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறியது.
அந்த 3 நாய்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியது. இதில் 14 ஆடுகள் இறந்தன. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு அப்பகுதி கால்நடை மருத்துவர் வெங்கட் சிகிச்சை அளித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 14 ஆடுகள் இறந்த சம்பவம் வடபாதிமங்கலம் மற்றும் கூத்தாநல்லூர் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடபாதிமங்கலம் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். சாலையில் நடந்தோ, வாகனங்களில் செல்லவோ அச்சமாக உள்ளது. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.