கர்நாடக மேல்-சபை கூட்டம் நேற்று காலை தொடங்கிது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ராதோட், தனது செல்போனில் ஆர்வமாக வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஆபாச காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் செல்போனில் வீடியோ பார்க்கும் வீடியோ காட்சி கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரகாஷ் ராதோட், "நான் எனது செல்போனில் நிறைய வீடியோக்கள் இருந்தன. அதை நீக்கிக் கொண்டிருந்தேன். எனது கேள்விக்கு செல்போனில் டிஜிட்டலில் பதில் அனுப்பி இருந்தனர். அந்த பதிலை தேடிக் கொண்டிருந்தேன். நான் எந்த ஆபாச வீடியோவையும் பார்க்கவில்லை. ஒருவேளை எனக்கு தெரியாமல் ஏதாவது வீடியோவை பார்த்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதற்கு முன்பு, எடியூரப்பா முதல்-முறையாக முதல்-மந்திரியாக இருந்தபோது, லட்சுமண் சவதி, கிருஷ்ண பாலேமர், சி.சி.பட்டீல் ஆகிய 3 மந்திரிகள் சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர். அது தொடர்பான வீடியோ காட்சிகள் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் தற்போது லட்சுமண் சவதி துணை முதல்-மந்திரியாகவும், சி.சி.பட்டீல் மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.