கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஏராளமான படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டன. அதேபோல் சில படங்களை நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பினர். அந்தவகையில், கடந்த தீபாவளியன்று, யோகிபாபு, பிரசன்னா நடித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் டி.வி.யில் வெளியிட்டனர்.
அண்மையில் பொங்கலுக்கு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் டி.வி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. டி.ஆர்.பி.யிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்து வரும் புதிய படம் ஒன்று நேரடியாக டி.வி.யில் வெளியிடுவதற்காக தயாராகிறதாம். இப்படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் இயக்குகிறார். பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அல்லது உழைப்பாளர் தினம் (மே 1) அன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.