அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்குப்பிறகு டெட்ராய்ட்டின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் அங்கு உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ வீட்டினுள்ளும் பரவியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம் விழுந்த வீட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.