தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று ஒரு லாரியும், சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்று கொண்டு இருந்தன. இதனால் தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. அப்போது ஆந்திராவில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி போக்குவரத்து பாதிப்பால் சாலையில் அணிவகுத்து நின்ற 12 கார்கள், ஒரு சரக்கு வேன் ஆகியவை மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 4 பேர் பலியானர்கள். இந்த தொப்பூர் கனவாய் ஆபத்து நிறைந்த பகுதியாக கருத்தப்படுகிறது. இதில் விபந்துகள் நிகழ்வது தொடர் கதையாக உள்ளது.

 

தர்மபுரியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் மாவட்டத்தின் எல்லையான தொப்பூர் கணவாய் உள்ளது. இக்கணவாயின் வழியாக 7-ம் எண் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் வாகனங்கள் இந்த கணவாய் வழியாகத்தான் செல்கின்றன. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையை கடக்கின்றன.

சேலத்தை தருமபுரி மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலை இதுதான். இரு பக்கங்களிலும் மலைகளும் காடுகளும் அடர்ந்து காணப்படுகின்றன. மேலும் குரங்கு, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, மயில், முயல் போன்ற விலங்குகள் உலவும் வனப்பகுதியாகவும் உள்ளது. இருபுறமும் மலை களாலும்,காடுகளாலும் சூழ்ந்த தொப்பூர் கணவாய் 3.5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பாறைகளால் சூழ்ந்த இந்த கணவாய் பகுதி இறக்கம், வளைவு, மேடு நிறைந்த பகுதியாக உள்ளது. எஸ் வடிவில் மரண வளைவுகள் உள்ளன. இந்த கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதில் பலர் உயிரிழக்கிறார்கள்.

பெங்களூருவில் இருந்து சேலம் செல்லும் வாகன ஓட்டிகள்தான் அடிக்கடி விபத்தை சந்திக்கிறார்கள். இந்த மலை பாதையை அமானுஷ்ய சக்திகள் மிகுந்த மர்மம் நிறைந்த கணவாய் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதி என்றால், தொப்பூர் கணவாய் என்று கூறும் அளவுக்கு இங்கு விபத்துகள் ஏராளம் நடக்கின்றன. இந்த கணவாய் பல உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 40-க்கும் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை விபத்துகளில் 39 பேரை தொப்பூர் கணவாய் பலி வாங்கியிருக்கிறது. பல விபத்துக்கள் தினம்தோறும் நடக்கிறது. பெரும்பாலான விபத்துக்களில் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. உயிரிழப்பு மற்றும் பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இரவு வேளைகளில் எவ்வளவு திறமையான டிரைவராக இருந்தாலும், தடுமாற்றத்துடன் வாகனம் ஓட்டும் இடமாக மர்மங்கள் நிறைந்த தொப்பூர் கணவாய் திகழ்கிறது.

தொப்பூர் கணவாயில் முனி, பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறும் அந்த பகுதி டிரைவர்கள், அந்த சாலையில் வாகனத்தை இரவு வேளைகளில் ஓட்டவே பயப்படுகிறார்கள். இங்கு அடிக்கடி விபத்து நடக்க பேய்கள் தான் காரணம் என்று உள்ளூர் டிரைவர்கள் கிலி கிளப்புகிறார்கள். ரோட்டின் இருபுறமும் உள்ள மலைகளில் இருந்து, இரவு நேரங்களில் பேய்கள் கடப்பதாகவும், அந்த நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதாகவும் சில டிரைவர்கள் கற்பனை கதைகளை சொல்கிறார்கள்.

இந்த பயம் காரணமாகவே அப்பகுதியில் மக்களாக சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலை கட்டியுள்ளனர். ஆனாலும், இப்பகுதியில் விபத்துகள் குறைந்தபாடில்லை. இதுபற்றி போலீசார் கூறுகையில், தொப்பூர் கணவாயில் அடிக்கடி நிகழும் விபத்துகளுக்கு காரணம் இது அபாயகரமான வளைவுகள் கொண்ட மலைப்பாதை என்பதுதான்.

மலைப்பகுதியில் வாகனத்தை 2-வது கியரில் ஓட்டி செல்வது போலத்தான் இந்த சாலையிலும் செல்ல வேண்டும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த டிரைவர்கள். ஆனால் புதிதாக இப்பகுதியில் வரும் டிரைவர்களுக்கு இந்த விவரம் தெரிவதில்லை. இதனால் அவர்களால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள். இந்த சாலை மேடு பள்ளமாகவும்,வளைவுகள் மோசமாகவும், மலைப்பாங்காகவும் இருப்பதால், மற்ற சாலைகளைப் போல் இந்த சாலையில் அதிவேகத்தில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம்.

அதனால் வாகனத்தை கட்டுப்படுத்த தவறும் லாரி டிரைவர்கள், முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிவிடுகிறார்கள். அல்லது கட்டுப்படுத்த தெரியாமல் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழக்கிறார்கள். விபத்துகள் நிகழாமல் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் குறிஞ்சி நகர் சுங்கச்சாவடியில் உள்ள ஒலிப்பெருக்கியில், வாகனத்தை 2-வது கியரில் இயக்க வேண்டும் என்றும், அபாயகரமான மலை சாலை உள்ளது என்றும் போலீசார் எச்சரிக்கிறார்கள்.

தொப்பூர் கணவாய் சாலை

இந்த சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு சாலை அமைந்துள்ள இடத்தின் தன்மையே காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். அதுவும் இப்பகுதியில் வரும் மூலிகை காற்றை சுவாசிப்பதால் விபத்து ஏற்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் விளக்கம் அளிக்கின்றனர். இந்தப் பகுதியில் ஆவி, பிசாசு என்பதெல்லாம் சமூக விரோதிகள் கிளப்பிவிடும் வதந்தி. இந்தப் பகுதியில் ஏதோ தவறு நடக்கிறது. அதை மறைக்க, அல்லது ஆள் நடமாட்டத்தைத் தடுக்க இதுமாதிரி வதந்திகளைப் பரப்புகிறார்கள். எனவே காவல்துறை ரோந்துப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்‘ என்றும் அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர். விபத்துகளை தடுக்க தொப்பூர் கணவாய் சாலை வடிவமைப்பை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

சாலை விரிவாக்கம், வேகக் குறைப்பு, மின்விளக்குகள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு” என எதுவும் பலனளிக்காமல் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சாலையின் ஏற்றம் இறக்கமும், வளைவு நெளிவுகளும் விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பதால் ஓரளவிற்கு விபத்துகளை தவிர்க்கலாம். அதிகம் செலவாகும் திட்டம். இதனால் சுங்க கட்டணம் உயரும். அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு ஒரு நிரந்தர தீர்வினை வழங்கிட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.