கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி தினேஷ்குமார் (26) என்பவரை காதலித்து வந்தார். இதை அறிந்த ரேவதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரேவதி கடந்த மாதம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர், தினேஷ்குமாரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் உள்ள உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். இதையடுத்து 2 பேரும் வேலை தேடினர். ஆனால் வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கவலை அடைந்த தினேஷ்குமார் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடிவு செய்தார். இது பற்றி அவர், தனது மனைவி ரேவதியிடம் கூறியுள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் ரேவதிக்கு சொந்த ஊர் செல்ல விருப்பமில்லை என்று தெரிகிறது. ஆனால் தினேஷ்குமார் தொடர்ந்து சொந்த ஊர் செல்ல வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ரேவதி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இந்த நிலையில், தினேஷ்குமார் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரேவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் வெறைட்டி ஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.