கண்டி, ஹுரிகடுவ ஸ்ரீ வித்யாசாகர மஹா பிரிவெனாவின் பணிப்பாளரும் விகாராதிபதியுமான ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நிகாயவின் மஹாநாயக்கர் அக்கமஹாபண்டிதர், அதிவணக்கத்திற்குரிய நாபாண பேமசிறி அபிதான தேரரின் அனுதாப பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அனுதாப பிரேரணையை முன்வைத்து பிரதமர் ஆற்றிய உரை வருமாறு, ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நாயக்கர் அக்கமஹாபண்டிதர், அதிவணக்கத்திற்குரிய நாபாண பேமசிறி அபிதான தேரரின் மறைவை முன்னிட்டு அனுதாப பிரேரணையை மதிப்பிற்குரிய பாராளுமன்றத்தில் மிகவும் மனவருத்தத்துடன் முன்வைக்கிறேன்.

கிரிபண்டா நிலமே மற்றும் பண்டார மெணிக்கே தம்பதியினருக்கு பிறந்த டிகிரி பண்டார, மறைந்த அதிவணக்கத்திற்குரிய தெறிபெஹே ஸ்ரீ சீலவங்ஷ தேரரின் வழிகாட்டலில் 1933ஆம் ஆண்டு நாபாண பேமசிறி எனும் பெயரில் புனித வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

1943ஆம் ஆண்டு கடுகஸ்தோட்டை பிங்காஒய எல்லையில் உபசம்பதாவிற்கு நியமிக்கப்பட்ட அவர், தகுதிகளை நன்கு பூர்த்தி செய்து பண்டிதர் பட்டம் பெற்றார். பரிவேனாசார்யவாகவும் பரிவேனாதிபதியாகவும் செயற்பட்ட அவர் ஹுரிகடுவ வித்யாசாகர பிரிவெனா உள்ளிட்ட பல வெஹெர விகாரைகளை ஆரம்பிப்பதற்கும் முன்னிலை வகுத்தார்.

கண்டி பிரதேச சங்க சபையின் தலைவர், ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நிகாயவின் சக்ஞா பதிவாளர், நீதித்துறை சங்கநாயக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2012ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நிகாயவின் மஹாநாயக்கர் பதவியையும் வகித்தார். சாசனசோபன, திரிபீடக சக்கரவர்த்தி, ஸ்ரீ சீலவங்ஷ வங்ஷாலங்காரதர, திரிபீடகவாஷிஷ்வர ராஜகுரு, பரியத்தி விஷாரத, வினயாசார்ய ஆகிய சாசனிய நமோபாதியிலிருந்து ஆற்றிய அவரது சாசன சேவையை கௌரவப்படுத்தும் வகையில் மியன்மார் அரசாங்கத்தினால் அக்கமஹா பண்டிதர் பட்டம் வழங்கப்பட்டது.

பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நாயக்கர் அக்கமஹாபண்டிதர், அதிவணக்கத்திற்குரிய நாபாண பேமசிறி அபிதான தேரரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.