ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) முழு நாளும் விரதம் அனுஷ்டிக்கலாம்.

அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

 


தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

இன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால், பழம், நீர் ஆகாரங்களை அருந்தலாம்.

அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

சூரசம்ஹாரத்தை முடிந்த பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய பின்னர் உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.

ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.