திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

 

மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலை முன்பு எழுந்தருளினார்.

 

 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

 

மதியம் சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய புறப்படுகிறார்.

 

வழக்கமாக கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவில் கிரிப்பிரகார கடற்கரை நுழைவுவாயில் அருகில் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

 

அப்போது தமிழக அரசு சார்பில் ‘‘திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுவார்கள். சூரசம்ஹாரம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.