தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அவர், பின்னர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக சமூக வலைதளப் பிரபலம் வாஹிதா அக்தர் அளித்த புகாரின் பேரில், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முத்துக்குமரன். இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இவர், அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்தார். மேலும், சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு பெரியதாக வாய்ப்புகள் எதுவுமு் அமையாத நிலையில், சமீபத்தில் இவர் மீது இன்ஸ்டா பிரபலம் ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான வாஹிதா அக்தர் என்பவர் தான் காதல் தோல்வியில் இருந்தபோது தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி வெளியிட்டிருந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரிய வைரலாக பரவியது. இந்த வீடியோவில் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் வாஹிதா அக்தர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் தப்பினார்.
அதே சமயம், அவர் முத்துக்குமரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் முத்துக்குமரன் குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். குறிப்பாக கவிஞர் தாமரை முத்துக்குமரனை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வாஹிதா அக்தர் புகாரின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வாஹிதா திங்கட்கிழமை புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவில் சென்னையில் சந்தித்த பிறகு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அவர், பின்னர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி எனச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து வாஹிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியான பிறகே இந்தப் புகார் வெளிச்சத்திற்கு வந்தது. சிகிச்சையில் இருந்தபோது, முத்துக்குமரனுடனான தனது உறவு குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தங்களின் எதிர்காலம் குறித்து அவர் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டினார். மேலும், "நீ சொன்ன எல்லாவற்றையும் விளையாட்டாகத்தான் சொன்னாயா" (You were just kidding about everything you said) என்ற செய்தியையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
ந்தக் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ள நிலையில், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்களும் திரைத்துறையினரும் இந்தச் சர்ச்சை குறித்துத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரன் மீது, பி.என்.எஸ் பிரிவு 69-ன் கீழ், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
