'ராமாயணா' பட விளம்பர நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பற்றிய நினைவுகளையும், நடிகர் ரன்பீர் கபூருக்குத் தமிழ் சினிமா மீதுள்ள பேரார்வத்தையும் நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் மிகப்பிரம்மாண்டமான செலவில் இரண்டு பாகங்களாக உருவெடுத்து வரும் திரைப்படம் ‘ராமாயணா’. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கி வரும் இப்படத்தின் ஒரு பாக தயாரிப்புச் செலவே தோராயமாக ரூ.2000 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக கே.ஜி.எஃப் புகழ் யஷும், சீதையாக சாய் பல்லவியும் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங்கும் களம் இறங்குகின்றனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இரு பெரும் இசை அமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இதன் முதல் பாகம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களை அடுத்து சென்னையிலும் படக்குழுவினர் பிரம்மாண்ட விளம்பர நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்."நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் தீவிர ரசிகை. பள்ளிப் பருவத்திலேயே அவருடைய பாடல்களுக்கு நடனமாடியிருக்கிறேன். என்னுடைய வாழ்வின் முக்கியமான பல நினைவுகளுக்கு அவருடைய பின்னணி இசையே காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் எனக்கு மறந்திருக்கலாம், ஆனால் அவருடைய இசையைக் கேட்கும்போது அந்த சம்பவங்கள் அனைத்தும் என் நினைவுக்கு வந்துவிடும். தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டத்தில் உழைத்து வருகிறார்; நாங்கள் இணைந்து 3 ஆண்டுகள் ஆகிறது.
தமிழ் பதிப்பிற்கு டப்பிங் செய்தபோது வசனங்கள் மிகக் கச்சிதமாக அமைந்திருந்தன. ஒரு நேரடித் தமிழ் படத்தைப் போல உணர்வும் உச்சரிப்பும் மிகச் சரியாக வந்திருந்தது. அதற்காகச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, அனைத்து மொழிகளிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப ராமாயணக் கதையைக் கொண்டு சேர்த்துள்ளனர். இந்தியக் காவியங்களில் ஒன்றான ராமாயணத்தை உலகத் தரத்தில், யாவரும் வியக்கும் வண்ணம் உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சண்டைக் பயிற்சியாளர்களை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.
அதேபோல, 'கே.ஜி.எஃப்' மற்றும் 'டாக்சிக்' படங்களின் மூலம் புகழ் பெற்ற யஷ் எங்கு சென்றாலும் தமிழர்கள் அவருக்குச் சொந்த மொழிக் கலைஞரைப் போன்ற பேராதரவை அளிக்கின்றனர். மொழி எல்லைகளைத் தாண்டி கலை நம்மை ஒன்றிணைத்துள்ளது.
ரன்பீர் கபூரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அந்தந்த வாரத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவார். நான் நடித்த 'அமரன்' தவிர்த்து 'மகாராஜா', 'பத்தா' என அனைத்து தமிழ் படங்களையும் தவறாமல் பார்த்துவிட்டுத் தன் பாராட்டுக்களைத் தெரிவிப்பார். அவர் தென்னிந்திய சினிமாவையும், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அந்த அளவிற்கு நேசிக்கிறார். அதை அவர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், திரையுலகின் மீதுள்ள அன்பால் அதைச் செய்கிறார். 'அனிமல்', 'பர்பி' போன்ற படங்களில் பிரமாதமாக நடித்த அவர், இதில் 'ராம்' கதாபாத்திரத்தில் தன் கண்கள் மூலமாகவே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று சாய் பல்லவி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
